காத்மாண்டு: நேபாள அரசு, மலையேற்ற சுற்றுலாவை ஊக்குவிக்க தொலைதூர மேற்குப் பகுதியில் உள்ள 97 மலைச் சிகரங்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கட்டண விலக்கு அளித்துள்ளது. இந்த மலைகள் 5,870 மீட்டர் முதல் 7,132 மீட்டர் உயரம் கொண்டவை.
குறைந்த பொருளாதார வாய்ப்புகள் உள்ள பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் அதிகரிப்பதே இதன் நோக்கம். கர்னாலி மற்றும் சுதுர்பாஷ்சிம் மாகாணங்களில் உள்ள இச்சிகரங்கள், இமயமலையின் குறைவாக பார்வையிடப்படும் பகுதிகளாகும்.

அரசு, எவரெஸ்ட் சிகரத்தை முயற்சிக்க முன் குறைந்தது 7,000 மீட்டர் உயரமுள்ள சிகரத்தை ஏற வேண்டும் என சட்ட திருத்த முன்மொழிவை வைத்துள்ளது. இது நேபாள பார்லிமென்டில் பரிசீலனைக்குப் பிறகு அமலுக்கு வரும்.
மேலும், எவரெஸ்ட் சிகரம் ஏறும் கட்டணம் 2025 செப்டம்பர் 1 முதல் ரூ. 9 லட்சத்திலிருந்து ரூ. 15 லட்சமாக உயர்த்தப்படும். இந்த நடவடிக்கை நேபாளத்தின் ஆராயப்படாத மலைப்பகுதிகளை உலகளவில் அறிமுகப்படுத்தும் ஒரு முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.