மணிப்பூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இனக்கலவரங்கள், வன்முறைகள், மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள் குறித்து நடுநிலையான தனி ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
மணிப்பூரில் கும்பல் வன்முறைகள் அதிகரித்ததற்கும், மாநிலத்தில் அமைதி நிலைக்காததற்கும் முதல்வர் பிரேன் சிங் நேரடியாக பொறுப்பாளி எனக் குற்றம்சாட்டியுள்ள அவர், சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த தவறியதன் விளைவாக, மாநில மக்கள் மிகுந்த துயரத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவித்தார்.
கலவரத்தின்போது 220-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 60,000-க்கும் அதிகமான மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர். பலர் அரசு முகாம்களில் தங்கியிருந்தபோதும், கடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் முதல்வர் பதவி விலகியுள்ள நிலையிலும், இன்னும் நிலைமை சரியாகாததால், நடுநிலையான விசாரணை ஆணையம் அமைத்து, உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.