இந்த 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் பல புதிய விமான நிலையங்கள் திறக்கப்பட்டு, புதிய விமான வழித்தடங்களில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பிராந்தியங்கள் மற்றும் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களை முக்கிய பெருநகரங்களுடன் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி சமீபத்தில் ரூ.19,650 கோடி செலவில் கட்டப்பட்ட நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார். டிசம்பர் மாதத்திற்குள் வணிக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

நவி மும்பை விமான நிலையம் மும்பை விமான நிலையத்தின் மீதான அழுத்தத்தை குறைத்து, ஒரு முக்கிய விமான மையமாக செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல், நொய்டா சர்வதேச விமான நிலையம் அக்டோபர் 30 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. முதற்கட்டத்தில் 10 இந்திய நகரங்களுடன் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்படும். பிறகு சர்வதேச விமான சேவைகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
2025 ஆம் ஆண்டில் பல புதிய பிராந்திய விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன அல்லது விரிவுபடுத்தப்பட்டுள்ளன. பீகார் மாநிலத்தின் பூர்னியா இப்போது கொல்கத்தா மற்றும் அகமதாபாத் நகரங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச ஹின்டன் விமான நிலையம் மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, கோவா, வாரணாசி, பாட்னா, இந்தூர் மற்றும் அகமதாபாத் ஆகிய 9 நகரங்களுடன் சேவை செய்கிறது. ஒடிசாவில் பிஜு பட்நாயக் மற்றும் வீர் சுரேந்திர சாய் விமான நிலையங்கள் புதிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஆன்மீக நகரமான அயோத்தியை டெல்லி, பெங்களூரு, அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் நகரங்களுடன் இணைத்து தினசரி விமான சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மும்பை மற்றும் போர்பந்தர் இடையிலான சேவை, மும்பை மற்றும் ஜலந்தர் இடையிலான புதிய நேரடி விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய சேவைகள் வர்த்தகம், சுற்றுலா மற்றும் பயணிகள் வசதியை மேம்படுத்தும் என்று விமான அதிகாரிகள் கூறுகின்றனர்.