புதுடில்லி: இந்தியா மற்றும் மங்கோலியாவுக்கிடையே நட்பு உறவு மேலும் வலுப்பெறுகிறது. மங்கோலிய அதிபர் குரேல்சுக் உக்னா நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்திருந்தார். அவர் நேற்று டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, இருநாட்டு உறவை மேம்படுத்தும் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தார். குறிப்பாக, ராணுவம், எரிசக்தி, கல்வி, சுகாதாரம் மற்றும் வர்த்தக துறைகளில் இணக்கப்பாட்டை வளர்க்கும் வகையில் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இரு தலைவர்களும் நடத்திய ஆலோசனைகளின் பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். மங்கோலிய குடிமக்களுக்கு இந்தியா வருவதற்கு இனி இலவச ‘இ-விசா’ வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இது இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. மோடி மேலும் கூறியதாவது, “இந்தியா மற்றும் மங்கோலியா இடையேயான உறவு வெறும் துாதரக உறவு மட்டுமல்ல, ஆன்மிக உறவாகும். பல நூற்றாண்டுகளாக புத்த மதத்தின் கொள்கைகள் இரு நாடுகளையும் இணைத்துள்ளன; அதனால் நாம் ஆன்மிக சகோதரர்கள்” என்றார்.
மங்கோலியாவின் வளர்ச்சிக்காக இந்தியா பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமானது, இந்தியா வழங்கிய 15,000 கோடி ரூபாய் கடனுதவி திட்டத்தின் கீழ் மங்கோலியாவில் கட்டப்பட்டு வரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை. இது அந்நாட்டின் எரிசக்தி துறையில் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கல்வி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்ற துறைகளிலும் இரு நாடுகள் இணைந்து பணிபுரிவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்த சந்திப்பு இந்தியா – மங்கோலியா உறவில் புதிய அத்தியாயத்தைத் திறந்திருக்கிறது. ஆசிய நாடுகளுடன் இந்தியா வலுவான கூட்டுறவை உருவாக்கும் பிரதமர் மோடியின் முயற்சியில் இது ஒரு முக்கிய படியாகும். இரு நாடுகளும் தங்கள் ஒற்றுமை, மத மற்றும் கலாச்சார பிணைப்புகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் மேலும் பல இணைப்புத் திட்டங்களை மேற்கொள்ளவிருக்கின்றன.