பஞ்சாப்பில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், மாநில அரசு இதை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, 5 அமைச்சர்கள் அடங்கிய ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவை நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா தலைமையில் அமைத்துள்ளது. இதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் அமன் அரோரா, சுகாதார அமைச்சர் பல்பீர் சிங், போக்குவரத்து அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர், தொழில்துறை அமைச்சர் தரன்பிரீத் சிங் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
போதைப்பொருள் புழக்கத்துக்கு எதிராக காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், மேலும் வலுவான திட்டங்களை செயல்படுத்தவும் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து பஞ்சாப்பில் போதைப் பொருட்களை ஒழிக்க முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி வருகின்றன. இந்த புதிய குழு, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் வலுவாக செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.