புது டெல்லி: இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் குடியேற்ற முறைகளை எளிதாகவும் விரைவாகவும் முடிக்க வசதியாக இ-அரைவல் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 1-ம் தேதி முதல் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவிற்குள் எளிதாக நுழைவதற்கு வசதியாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தால் இந்த அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த இ-அரைவல் கார்டு தேவைப்படுபவர்கள் இந்திய குடியேற்றத் துறையால் அமைக்கப்பட்ட வலைத்தளம், சு-சுவாகதம் மொபைல் செயலி மற்றும் இந்திய விசா ஆன்லைன் வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வெளிநாட்டிலிருந்து விமானம் புறப்பட்ட 24 மணி நேரம் முதல் 72 மணி நேரத்திற்குள் விண்ணப்பம் செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில், இது விசா அல்ல. சுற்றுலா, வணிகம் மற்றும் படிப்புக்காக வரும் வெளிநாட்டு பயணிகள் விசா வைத்திருக்க வேண்டும்.
இந்த இ-அரைவல் கார்டு இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்பு தேவைப்படும் ஒரு அனுமதி மட்டுமே என்பதை பயணிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.