புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரி மசோதாவை மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. சபை மீண்டும் கூடியதும், எதிர்க்கட்சிகளின் கூச்சல் மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார்.
அதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் தொடக்க நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், மசோதாவை தாக்கல் செய்வதற்கான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பினர். இதையடுத்து, இந்த மசோதாவை மக்களவைத் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புமாறு சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டார். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நேற்றுடன் நிறைவடைந்தது.
மக்களவையின் 2-வது கூட்டத்தொடர் மார்ச் 10-ம் தேதி தொடங்க உள்ளது. அதுவரை மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதிய வருமான வரி மசோதாவை மக்களவைத் தேர்வுக் குழு முழுமையாக ஆய்வு செய்யும். தேவைப்பட்டால் அதில் உரிய மாற்றங்கள் செய்து மார்ச் 10-ம் தேதி மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்யும். இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பதிவில், ‘எம்.பி.க்கள் கூறிய கருத்து சரியல்ல. தற்போதைய பழைய வருமான வரி (ஐடி) சட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன.
தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தில் 536 பிரிவுகள் உள்ளன. 622 பக்கங்கள் மற்றும் 16 அட்டவணைகள் மட்டுமே உள்ளன. இது எளிதாக இருக்கும்.’ 1961-ம் ஆண்டு பழைய வருமான வரிச் சட்டத்தை மாற்றும் நோக்கில் புதிய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. ஏப்ரல் 2026 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரிச் சட்டத்தில் 60 ஆண்டுகளாக இருந்த ‘முந்தைய ஆண்டு’ என்ற சொல் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ‘வரி ஆண்டு’ என்று மாற்றப்பட்டுள்ளது. ‘மதிப்பீட்டு ஆண்டு’ என்ற வார்த்தையும் நீக்கப்பட்டுள்ளது.