கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில சட்டசபையின் நடப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதாவில் மதுபான பார்களில் பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 116 ஆண்டுகளாக இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த திட்டத்தால் சுற்றுலாத்துறையில் பாலின சமத்துவத்தை மேம்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிதி மசோதாவை மாநில அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா தாக்கல் செய்தார். அதில், ‘1909-ம் ஆண்டு கொல்கத்தா (அப்போது கல்கத்தா) தலைநகராக இருந்தபோது ஆங்கிலேயர்களால் மேற்கு வங்க கலால் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த மேற்கு வங்க கலால் சட்டம் பாலின பாகுபாட்டைக் காட்டுகிறது.

அதை தவிர்க்கும் வகையில் மதுக்கடைகளில் பெண்களை வேலைக்கு அமர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை அமலில் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன. மசோதாவில் மேலும் சில விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதை தடுக்கும் வகையில், வெல்லம் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்கள் வழங்கப்படுவதை கண்காணிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல், தேயிலை தொழிலில் ஈடுபடுவோரின் சிரமங்களைக் குறைக்கும் வகையில், 1944-ல் கொண்டு வரப்பட்ட மேற்கு வங்க விவசாய வருமான வரிச் சட்டமும் திருத்தப்பட்டு வருகிறது.