புதுடில்லி: போக்குவரத்து நெரிசல் மிகுந்த ‘பீக் ஹவர்ஸ்’ நேரங்களில் ஓலா, ஊபர் போன்ற வாடகை டாக்சி நிறுவனங்களுக்கு இரு மடங்கு வரை கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக 2025 ஆம் ஆண்டுக்கான மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இந்த புதிய மாற்றங்கள் மூலம், டாக்சி சேவை வழங்கும் நிறுவனங்கள் வருவாயை அதிகரிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளன. ஆனால் பயணிகள் விலைவாசி சுமைக்கு உள்ளாகும் நிலையும் உருவாகியுள்ளது.

இந்த விதிமுறைகளில், அதிக நெரிசல் நேரங்களில் 2 மடங்கு வரை கட்டணம் வசூலிக்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது முன்பு 1.5 மடங்காக இருந்தது. அத்துடன், பயணங்கள் குறைவான நேரங்களில் அடிப்படை கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் குறைவாக வசூலிக்கலாம். பயணத்தை ஓட்டுநர் தவறாக ரத்து செய்தால், அதிகபட்சம் ₹100 அல்லது 10 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். இதேபோல, பயணியரால் ரத்து செய்யப்படும் நிலையிலும் அபராதம் விதிக்கப்படும். மாநில அரசுகள் இந்த மாற்றங்களை மூன்று மாதங்களில் அமல்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளரை ஏற்ற இடத்திலிருந்து மட்டுமே கட்டணம் ஆரம்பிக்கலாம். ஓட்டுநர் இருக்கும் இடத்திலிருந்து வாடிக்கையாளரின் இடம் வரை பயணம் செய்யும் தூரம் 3 கி.மீ.க்கு உட்பட்டால் எந்த கட்டணமும் வசூலிக்க முடியாது. ஓட்டுநர் தன் சொந்த வாகனத்தை பயன்படுத்தினால், மொத்த கட்டணத்தில் 80 சதவீதம் வரை அவருக்கு வழங்கப்பட வேண்டும். நிறுவன வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு 60 சதவீதம் அளிக்கப்பட வேண்டும். இந்த வருமானப் பகிர்வு தினசரி, வாரம் அல்லது இரு வாரத்திற்கு ஒருமுறை வழங்கப்பட வேண்டும்.
முக்கியமாக, ஓட்டுநர்களுக்கான பாதுகாப்பு கருத்தில் கொண்டு, ஒவ்வொருவருக்கும் ₹5 லட்சம் மதிப்பில் சுகாதார காப்பீடு மற்றும் ₹10 லட்சம் மதிப்பில் ஆயுள் காப்பீடு வழங்க வேண்டும் என விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் டாக்சி சேவைகளை நவீனப்படுத்துவதற்கும், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் இருவருக்கும் சமூக உணர்வை அளிக்கவும் உருவாக்கப்பட்டவை. ஆனால் கட்டண உயர்வு குறித்து பயணிகள் சமூகத்தில் ஏற்கெனவே எதிர்ப்பு உருவாக தொடங்கியுள்ளது.