கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா கோயில் நகரத்தில் பெண்கள் கொலை செய்து புதைத்த சர்ச்சை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் புதிதாக மேலும் இரண்டு பேர் சாட்சிகளாக முன்வந்ததால் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஊழியர்கள் தெரிவித்த குற்றச்சாட்டின் பேரில், மாநில அரசு 20 அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. அவர்கள் நேத்ராவதி ஆற்றங்கரையில் 16 இடங்களில் தோண்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

தோண்டும் பணியின் போது சில குழிகளில் பெண்களின் எலும்புக் கூடுகளும் சேலைகளும் கண்டெடுக்கப்பட்டன. இது வழக்கை மேலும் சிக்கலாக்கியுள்ளது. பாகுபலி மலைப்பகுதியிலும் தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன. புதியதாக முன்வந்த சாட்சிகள், பெண்களின் சடலங்கள் புதைக்கப்படுவதை தாங்களே கண்டதாக கூறியிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மஸ்தலா கோயிலில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டதாக கூறியிருந்தனர். இந்த குற்றச்சாட்டு சமூகத்திலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. மாநில அரசு இதனை மிகுந்த கவனத்துடன் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கின் முடிவு எப்போது வெளிவரும் என்பது தெரியாத நிலையில், சாட்சிகள் அளிக்கும் ஒவ்வொரு தகவலும் விசாரணைக்கு முக்கிய ஆதாரமாக இருக்கிறது. தர்மஸ்தலா சம்பவம் நாடு முழுவதும் பேசப்படும் பிரச்சினையாக மாறியுள்ளது.