ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் பொருளாதாரச் சங்கிலி அதன் தேசிய நெடுஞ்சாலைகளே ஆகும். ஏனெனில் சாலைகள் நன்றாக இருந்தால் அதிகமான சரக்குகள் சுழற்சி செய்து பரிமாற்றம் செய்யப்படுவதை உறுதி செய்யும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வளரும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) இந்தியாவின் எந்த பகுதியிலும், கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை மிகப்பெரிய அளவில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்துள்ளது.

மார்ச் 31 ஆம் தேதி முடிவடைந்த நிதியாண்டில், NHAI 5,614 கி.மீ. நீளமான தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளது. 2025 நிதியாண்டில் 5,150 கி.மீ. சாலை அமைப்பதற்கான இலக்கு இருந்த நிலையில், இந்த இலக்கை முந்திவிட்டு அதிக நீளமான நெடுஞ்சாலைகளை அமைத்து NHAI ஒரு சாதனையை காட்சியளித்துள்ளது.
2024-25 நிதியாண்டுக்கான நிதி செலவு ரூ.240,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த இலக்கை மீறி ரூ.250,000 கோடிக்கும் அதிகமாக செலவினம் உயர்ந்துள்ளதாக NHAI தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த செலவு, அரசாங்க பட்ஜெட் ஆதரவு மற்றும் NHAI-யின் சொந்த வளங்களின் மூலம் திரட்டப்பட்டுள்ளது.
2023-24 நிதியாண்டில், NHAI மூலதனச் செலவு ரூ.207,000 கோடியுடன் ஒப்பிடும்போது சுமார் 21 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல், 2022-23 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது இந்த செலவினம் சுமார் 45 சதவீதம் அதிகரித்துள்ளது.
நெடுஞ்சாலைகளின் மேம்பாட்டுக்கான நிதி திரட்டலில், NHAI சுங்கச்சாவடி பரிமாற்றம் (TOT), உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை (InvIT) மற்றும் சுங்கப் பத்திரமயமாக்கல் போன்ற வழிமுறைகளை பயன்படுத்தியுள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைப் பிரிவுகளில் சராசரியாக நான்கு முதல் ஐந்து சதவீதம் வரை சுங்கக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.