புதுடெல்லி: ஒரு வங்கிக் கணக்கிற்கு 4 பேர் நியமனம் செய்ய வகை செய்யும் வங்கிச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. வங்கிகளில் கோரப்படாத தொகை ரூ.78,000 கோடியாக அதிகரித்துள்ளது. பல்வேறு காரணங்களால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வங்கிச் சட்டங்களில் பல்வேறு திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 2ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து வங்கிச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். தற்போது வங்கிகளின் சேமிப்பு கணக்கு மற்றும் நிலையான வைப்பு கணக்குகளில் ஒரு நாமினியை மட்டுமே நியமிக்க முடியும். புதிய மசோதாவின்படி, ஒரு வங்கிக் கணக்கிற்கு 4 நாமினிகளை நியமிக்கலாம்.
தற்போதைய நடைமுறைகளின்படி, ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒரு சிறப்பு அறிக்கையை வங்கிகள் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது வாரத்தின் 2வது மற்றும் 4வது வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். புதிய சட்டத்திருத்த மசோதாவின்படி, வங்கிகள் சிறப்பு அறிக்கையை மாதம் 15 மற்றும் 30 தேதிகளில் தாக்கல் செய்யலாம். புதிய மசோதாவில் கூட்டுறவு வங்கிகளில் இயக்குநர்களின் பதவிக்காலம் 8 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
வங்கி சட்ட திருத்த மசோதா குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். “5 சட்டங்களின் திருத்தம் ஒரே மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் விஷயத்தில் மாநில அரசுகளின் நலன்கள் பாதிக்கப்படலாம்” என்று குற்றம் சாட்டினர்.
இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், ”ஒரிரு கூட்டுறவு வங்கிகளுக்கு சட்ட திருத்தம் செய்யப்படவில்லை. நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை மனதில் கொண்டு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு நீதிமன்றங்களின் தீர்ப்புகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன,” என்றார்.