லக்னோ: ‘மரணம் தவிர்க்க முடியாதது. விதியிலிருந்து யாரும் தப்ப முடியாது’ என ஹத்ராஸில் 100க்கும் மேற்பட்டோர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலே பாபா கூறியுள்ளார். கடந்த ஜூலை 2ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சிக்கந்த்ரா ராவ் பகுதியில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 121 பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்தனர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தேவபிரகாஷ் மதுகர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை அறிக்கையில் பாபாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
தப்பிக்க முடியாது
இந்நிலையில், கஸ்கஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் போலே பாபா பேசியதாவது: ஹத்ராஸில் 121 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நாங்கள் நிற்கிறோம். மரணம் தவிர்க்க முடியாதது. விதியிலிருந்து யாரும் தப்ப முடியாது.
விசாரணை கமிஷன்
எல்லோரும் ஒரு நாள் இறந்துவிடுவார்கள். இந்நிகழ்ச்சியின் போது 15க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் விஷவாயு தெளித்துவிட்டு காரில் ஏறி தப்பிச் சென்றதாக எங்கள் வழக்கறிஞர் கூறியது முற்றிலும் உண்மை. அவர் கூறியது போல் சதி நடந்துள்ளது. சிலர் என்னை அவதூறாகப் பேச முயற்சிக்கின்றனர். விசாரணை கமிஷன் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. உண்மை வெளிவரும், சதி அம்பலமாகும். இவ்வாறு அவர் பேசினார்.