புதுடில்லி: பீஹாரில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் தகுதி வாய்ந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கில், தேர்தல் கமிஷன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், முன்னறிவிப்பு இன்றி எந்தவொரு வாக்காளரும் நீக்கப்பட மாட்டார்கள் என உறுதியளித்துள்ளது. வரைவு பட்டியலில் இருந்து யாரையும் நீக்குவதற்கு முன் நோட்டீஸ் வழங்கி கருத்துகளை கேட்கும், தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வாய்ப்பு அளிக்கும் என்றும் கூறியுள்ளது.

தற்காலிகமாக புலம்பெயர்ந்தவர்கள் விடுபடாதபடி, ஹிந்தி மொழியில் 246 நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கிராமப் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, தகுதி வாய்ந்த வாக்காளர்கள் விடுபடாத வகையில் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெறுகின்றன.
தேர்தல் கமிஷன், கொள்கை ரீதியாக இயற்கை நீதியின் கொள்கைகளை பின்பற்றும் என்றும், வாக்காளர் உரிமையைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.