புதுடில்லி: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் நிலைமைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் வரவிருக்கும் மாதங்களில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்படாது என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுத மையங்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டு வருவதால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்துள்ளது. ஒரு நாளில் விலை 12 சதவீதம் உயர்ந்த நிலையில், ஒரு பேரல் எண்ணெய் விலை 77 அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.

இந்த சூழ்நிலையை முன்வைத்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டின் எரிசக்தி நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அவரது பதிவில், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாட்டில் சிறந்த எரிசக்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன எனவும், இந்தியாவின் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான அளவில் இருப்புகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் எரிசக்தி பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து எதிர்கால தேவைகளுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், மக்கள் தேவைகளுக்கு எப்போது வேண்டுமானாலும் எரிசக்தி வழங்கும் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
உலகளவில் எரிசக்தி விநியோகத் துறையில் பதற்றம் நிலவினும், இந்தியாவின் தேவைகளை பூர்த்தி செய்ய எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்று ஹர்தீப் சிங் புரி வலியுறுத்தினார்.
எரிசக்தி துறையில் இந்திய அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக எந்தவொரு அவசர நிலையும் உருவாக வாய்ப்பு இல்லை என்று அவர் தெரிவித்தார்.