கொல்கத்தா: கொல்கத்தா, மேற்கு வங்கம், ஹவுரா, சால்ட் லேக், பாரக்பூர் உள்ளிட்ட கொல்கத்தாவை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழையால் நகரின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. விமான நிலைய ஓடுபாதை மற்றும் டாக்ஸிவேயில் சுமார் 2 அடி உயரத்திற்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் இங்கிருந்து விமானங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து விமான நிலையத்தில் தேங்கிய வெள்ள நீரை அகற்றும் பணியில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், ஹவுரா, மேற்கு பர்தாமான், பிர்பம், கிழக்கு பர்தாமான், ஹூக்ளி, நதியா, வடக்கு 24 பர்கானாஸ், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நேற்று காலை 8 மணி வரை கொல்கத்தாவில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழை காரணமாக கொல்கத்தாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.