புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேச திருத்த மசோதா ஆகியவை மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதாக முதலில் பட்டியலிடப்பட்டது. ஆனால், நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான திருத்தப்பட்ட பட்டியலை மக்களவைச் செயலகம் தற்போது வெளியிட்டுள்ளது.
துணை மானியக் கோரிக்கைகள் மீது நாளை விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிறைவடைந்த பின்னரே ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாக்கள் இந்த வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 543 லோக்சபா தொகுதிகள், மாநிலங்களில் உள்ள 4,120 சட்டசபை தொகுதிகள் மற்றும் 30 லட்சம் உள்ளாட்சி பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதி ஆயோக் தலைவர் என்.கே. சிங், மக்களவை முன்னாள் செயலாளர் சுபாஷ் கே காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
ராம்நாத் கோவிந்த் கமிட்டி பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி 18,000 பக்க அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சமர்ப்பித்தது. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். இந்த தேர்தல் முடிந்து இன்னும் 100 நாட்களில் நாடு முழுவதும் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஒரே வாக்காளர் பட்டியல் தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை ராம்நாத் கோவிந்த் கமிட்டி செய்துள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான மசோதா வரையறுக்கப்பட்டது.
சமீபத்தில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து மக்களவையில் நாளை மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளதாக தெரிகிறது.