டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்று மாசு அளவு மோசமாகி, காற்றின் தரக் குறியீட்டின்படி, நேற்று காலை 457 என்ற மோசமான நிலையை எட்டியது.
இதனையடுத்து, கிராப்-4 எனப்படும் நான்காம் கட்ட கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஏற்க மத்திய அரசின் காற்று தர ஆய்வுக் குழு நேற்று உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, இந்த புதிய கட்டுப்பாடுகளின்படி, அனைத்து அரசு திட்ட கட்டுமான பணிகள் மற்றும் டில்லிக்குள் டிரக்குகள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.