கேரள மாநிலம் பாலக்காட்டில், வி.டி. பட்டதிரிப்பாடு நினைவு கலாசார மையம் இன்று திறக்கப்பட இருக்கிறது. இந்த மையத்தை மாலை 4 மணிக்கு முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைக்கிறார். கலாசாரம் மற்றும் இளைஞர் நலவாரிய அமைச்சர் சஜி செரியான் இந்த விழாவில் தலைமை ஏற்கிறார். பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அமைந்துள்ள இந்த மையம் ஐந்து ஏக்கர் பரப்பளவில் 68 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.
முதல்வராக பினராயி விஜயன் பதவி ஏற்ற பிறகு, மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நினைவுச் சின்னங்களாக கலாசார மையங்களை நிறுவும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக 2019ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த மையம், தற்போது முழுமையாக கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்படுகிறது.
இந்த மையத்தின் பிரதான நோக்கம், பாலக்காட்டில் மறைந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது. இதில் ‘கண்ணியார் களி’, ‘தோல்ப்பாவை கூத்து’, ‘பொராட்டு நாடகம்’ போன்ற பாரம்பரிய கலைகள் மேடையிடப்படவுள்ளன. நாட்டுப்புறவியல் மையம் என்ற பகுதியும் இதில் ஒன்றாக இணைக்கப்பட்டிருப்பதால், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் இந்த கலைவடிவங்களைப் பற்றி கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.
மேலும், இந்த கலாசார மையத்தில் ஒரு நவீன டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பாலக்காட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களின் முக்கியமான படைப்புகள் இங்கு சேமிக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் புதிய தலைமுறைக்கு இலக்கிய செல்வங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.
மேலும், ஓவியர்கள், சிற்பிகள் மற்றும் கலைஞர்களுக்காக பயிற்சிக்கான வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி மண்டபம், படப்பிடிப்பு வசதி மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கான மேடையும் இதில் உள்ளடங்கியுள்ளது.
இந்த மையம், பாலக்காடு மாவட்டத்தின் கலாசார மரபுகளை பாதுகாக்கும் முக்கிய மையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.