ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவை சேர்ந்தவர் மணீஷ். சமீபத்தில் விபத்தில் காலில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், இடது காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான தேதி வரும் 12-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டது.

மணீஷுடன் அவரது தந்தை ஜெகதீஷ் மருத்துவமனைக்கு வந்திருந்தார். ஜெகதீஷுக்கு ஏற்கனவே பக்கவாதம் ஏற்பட்டு பேச முடியாது. சம்பவத்தன்று மணீஷ் ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே ஜெகதீஷ் இருந்தார். அப்போது, அங்கு வந்த சில டாக்டர்கள் ஜெகதீஷை சிகிச்சைக்கு அழைத்தனர். உடனே கையை உயர்த்தினார். இதையடுத்து ஜெகதீஷை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்ற டாக்டர்கள், அவரது கையில் அறுவை சிகிச்சை செய்ய தொடங்கினர்.
இதையறிந்த அவரது மகன் மணீஷ் அதிர்ச்சி அடைந்தார். உடனே அங்கு சென்று மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரது தந்தை கையில் 6 தையல் போட்டு திருப்பி அனுப்பப்பட்டார். மேலும் ஒருவருக்கு நோயாளி என நினைத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.