புதுடில்லி: இந்தியா – பாகிஸ்தான் மோதல் மே 10-ஆம் தேதிக்கு பின்பும் நீடித்ததாக ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவேதி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பொறுப்பு பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் ஏற்றது.

இதனைத் தொடர்ந்து மே 7 அன்று மத்திய அரசு “ஆப்பரேஷன் சிந்துார்” நடவடிக்கையை மேற்கொண்டது. இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்திய தாக்குதலில் ஒன்பது பயங்கரவாத தளங்கள் அழிக்கப்பட்டன. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட அமைப்புகளின் கட்டமைப்புகள் நசுக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் எல்லை மாநிலங்களில் தாக்குதல் நடத்தியது; இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.
போர் மே 10-இல் முடிவுக்கு வந்ததாகக் கூறப்பட்டாலும், உண்மையில் அது பல முடிவுகள் எட்டப்படும் வரை நீடித்ததாக தளபதி திவேதி குறிப்பிட்டார். டில்லியில் நடந்த “ஆப்பரேஷன் சிந்துார்: தி அன்டோல்டு ஸ்டோரி ஆஃப் இந்தியாஸ் டீப் ஸ்டிரைக்ஸ் இன் பாகிஸ்தான்” புத்தக வெளியீட்டு விழாவில் அவர் இவ்வாறு பேசினார்.
அவர் மேலும், “ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி பெற்றதற்குக் காரணம் முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடே. தாக்குதலுக்கு பின்பும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத ஊடுருவல்கள் தொடர்கின்றன. சமீபத்திய ஜி.எஸ்.டி சீர்திருத்தங்கள் ராணுவத்தின் நவீனமயமாக்கலை வேகப்படுத்தும்; ட்ரோன்கள் மீதான வரிக் குறைப்பு, சிறிய நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு ஆகியவை பாதுகாப்புத்துறைக்கு கூடுதல் பலமாக இருக்கும்” என்றார்.