புதுடில்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆப்பரேஷன் சிந்துூர் நடவடிக்கையில், பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்திய அமெரிக்காவின் எப்-16 மற்றும் சீனாவின் ஜே-17எஸ் போர் விமானங்கள் உட்பட 12க்கும் மேற்பட்ட விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப்படை தளபதி ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார்.

மே 7ஆம் தேதி நடந்த இந்த ஆபரேஷனில், பாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு, 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது. ஆனால், இந்தியாவின் துல்லியமான தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் இறுதியில் போர்நிறுத்தத்துக்குக் கெஞ்சியது.
ஏ.பி.சிங் கூறுகையில், போர் விமானங்களுடன், பாகிஸ்தானின் வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு விமானமும் அழிக்கப்பட்டது. அதோடு, நான்கு ரேடார் அமைப்புகள், இரண்டு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், இரண்டு ஓடுபாதைகள், மூன்று விமான தளங்களிலிருந்த ஹேங்கர்கள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டன. மேலும், தரை-வானில் பாயும் ஏவுகணை அமைப்புகளும் அழிக்கப்பட்டன.
இந்தியாவின் ரஷ்ய தயாரிப்பு எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பின் திறன் மற்றும் துல்லியமான ஏவுகணை தாக்குதல்களின் பலத்தால் பாகிஸ்தான் பெரும் இழப்புகளை சந்தித்தது. மேலும் மோதலைத் தொடர்ந்தால் நிலைமை மேலும் மோசமடையும் என்பதை உணர்ந்து பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாகவும் தளபதி வலியுறுத்தினார்.