வெள்ளத்தால் புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய குழு தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரியில் வெள்ள சேதங்களை மத்திய குழுவினர் இரண்டாவது நாளாக நேற்றும் ஆய்வு செய்தனர். பின்னர், மதியம் அணியினர் தங்களுடைய இருப்பிடம் திரும்பினர்.
அங்குள்ள கருத்தரங்கு அறையில் அரசு அதிகாரிகளுடன் வெள்ள சேதம் குறித்து விளக்க கூட்டம் நடந்தது. கூட்டத்தில் புதுச்சேரி தலைமைச் செயலர் சரத் சவுகான், அரசு செயலர்கள் மோரே, பங்கஜ்குமார், கேசவன், முத்தம்மா, நெடுஞ்செழியன், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் மற்றும் அரசுத் துறை இயக்குநர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். 60 வீடியோ காட்சிகள் மூலம் மத்திய குழுவினருக்கு வெள்ள சேதம் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இதுகுறித்து மத்திய குழு அதிகாரிகளிடம் கேட்டபோது, ”புதுச்சேரி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசிடம் அறிக்கை சமர்பிப்போம். அதன்பிறகு மத்திய அரசு முடிவெடுக்கும்” என்றனர்.