புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் ரேகா குப்தா டெல்லி முதல்வராக உள்ளார். ஆனால் எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், மூத்த தலைவருமான ஆதிசி தனது கணவர் குறித்து வெளியிட்டுள்ள பதிவில், ‘முதல்வர் ரேகா குப்தாவின் கணவர் மணீஷ் குப்தா, டெல்லி மாநகராட்சி, டெல்லி ஜல் போர்டு, பொதுப்பணித்துறை, டெல்லி நகர்ப்புற குடிசை மாற்று வாரியம் போன்ற துறைகளின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
முதல்வரின் கணவர் டெல்லியை அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆட்சி செய்து வருகிறார். ஒரு கிராமத்தில் ஒரு பெண் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவளுடைய கணவன் எல்லா வேலைகளையும் செய்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். பெண்களுக்கு ஆட்சி செய்யத் தெரியாதபோது இதைச் செய்கிறார்கள். ஆனால், இந்திய வரலாற்றில் பெண் முதல்வரின் கணவர் ஆட்சியமைப்பது இதுவே முதல் முறை.

டெல்லியில் அதிகரித்து வரும் மின்வெட்டு, தனியார் பள்ளிக் கட்டண உயர்வு பற்றி முதல்வர் பேசவில்லை. இந்த விவகாரங்கள் பற்றி முதலமைச்சருக்கு எதுவும் தெரியாதா? அல்லது ரேகா குப்தாவுக்கு ஆட்சி செய்யத் தெரியாதா? தினசரி மின்வெட்டுக்கு என்ன காரணம்?’ அவர் கூறினார். ஆதிசியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த டெல்லி பா.ஜ.க., தலைவர் வீரேந்திர சச்தேவா, ‘ரேகா குப்தாவின் கணவர் அவருக்கு உதவுவது சட்டவிரோதமோ, அநீதியோ அல்ல; ஆம் ஆத்மி ஆட்சியில் என்ன நடந்தது என்று தெரியாதா?
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோது, அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் தனது அலுவலகத்தில் இருந்தவர்களை சந்தித்து பேசினார். இது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் இல்லையா?’