தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற உள்ள ‘மிஸ் வேர்ல்டு’ உலக அழகிப் போட்டிக்காக 100க்கும் மேற்பட்ட அழகிகள் சமீபத்தில் வருகை தந்துள்ளனர். இந்த போட்டியின் இறுதிச்சுற்று மே 31ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அழகிகள் மாநிலத்திற்கு வருகைதந்ததை ஒட்டி, அவர்கள் பல முக்கிய சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில், தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட ருத்ரேஸ்வரா கோவில் அல்லது ராமப்பா கோவிலுக்கு அழகிகள் அண்மையில் சென்றனர். அங்கு அவர்களை வரவேற்கும் நிகழ்வின் போது, அழகிகள் வரிசையாக அமர்த்தப்பட்டு, உள்ளூர் பெண்கள் அவர்களது கால்களை தண்ணீரால் கழுவி மரியாதை செலுத்திய நிகழ்வு காணப்பட்டது.
இச்சம்பவம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதுடன், அதனை எதிர்த்து பா.ஜ.க., மற்றும் பாரத் ராஷ்ட்ர சமிதி உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. அவர்கள், இது இந்திய பெண்களின் மரியாதைக்கு எதிரான செயல் எனக் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள தெலுங்கானா மாநில அரசு, இது ஒருபோதும் அவமதிப்பு அல்ல என்றும், பாரம்பரிய விருந்தோம்பல் கலாசாரத்தின் ஒரு பகுதியாகவே நடந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளது. விருந்தினரை கடவுளாகக் கருதும் இந்திய பாரம்பரியத்தில் இந்த நடைமுறை இடம் பெற்றதாகவும், இது மூலம் சர்வதேச விருந்தினர்களுக்கு உயர்ந்த மரியாதை வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தற்போது அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒருபுறம் பாரம்பரியம் என்ற மதிப்பீடு வழங்கப்படும் வேளையில், மற்றொரு புறம் பெண்களின் அடிமைத்தனத்தை ஒட்டிய செயலாகவே இது விமர்சிக்கப்படுகிறது.