புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடரின் ஐந்தாவது நாளான இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூட்டத்தொடர் தொடங்கியது. அமெரிக்காவில் இருந்து 100-க்கும் மேற்பட்டோரை நாடு கடத்தியது குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்திருந்தது. எமது மக்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதைத் தடுக்கவும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கவும் இந்தச் சபை இந்தப் பிரச்சினையை உடனடியாகக் கையாள வேண்டும் என்று கூறியிருந்தது.
இந்நிலையில் சபையில் கேள்வி நேரம் தொடங்கியது. லோக்சபா கேள்வி நேரம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க ட்ரோன்களை பயன்படுத்துவது குறித்த கேள்வியுடன் தொடங்கியது. ஆனால், இந்தியர்களை நாடு கடத்துவது குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து மதியம் 12 மணிக்கு விவாதிக்கப்படும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
அடுத்ததாக ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தண்ணீரின் தரம் குறித்து பாஜக எம்பி சுதீர் கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அமைதி காக்குமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டார். இந்த விவகாரம் வேறொரு நாட்டின் கொள்கையுடன் தொடர்புடையது என்றும் அவர் கூறினார். அவரது கோரிக்கையை எதிர்க்கட்சிகள் ஏற்காததால், ஓம் பிர்லா அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபாவும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.