புது டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூர் கடந்த சில நாட்களாக பிரதமர் மோடியையும் மத்திய அரசையும் புகழ்ந்து வருகிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும், சசி தரூர் அதற்கு கவனம் செலுத்தவில்லை. காங்கிரஸின் எதிர்ப்பையும் மீறி, ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளுக்கு விளக்கமளிக்கும் எம்.பி.க்கள் குழுவில் சசி தரூர் சேர்க்கப்பட்டுள்ளார்.
பனாமாவில் பேசிய அவர், “இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கட்டுப்பாட்டுக் கோட்டை (எல்ஓசி) கடந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்குவது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு நாங்கள் இதைச் செய்ததில்லை. 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, நாங்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி (ஐபி) சென்றோம்.

இப்போது நாங்கள் இரு எல்லைகளையும் கடந்து பஞ்சாபின் மையப்பகுதியைத் தாக்கியுள்ளோம்.” இது காங்கிரஸ் கட்சியில் மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், மூத்த காங்கிரஸ் தலைவர் பவன் கெரா தனது சமூக ஊடகங்களில், சசி தரூர் 2018-ம் ஆண்டு தனது ‘The Paradoxical Prime Minister’ என்ற புத்தகத்தில் பிரதமர் மோடியை விமர்சித்ததாகப் பகிர்ந்துள்ளார்.