ஐதராபாத்: 72-வது சர்வதேச உலக அழகி போட்டி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மே 7 முதல் 31-ம் தேதி வரை நடக்கிறது. இந்த உலக அழகி போட்டியில் 140 நாடுகளை சேர்ந்த அழகிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். அதன் இறுதிப் போட்டி மே 31 அன்று ஹைடெக்ஸ் சிட்டியில் நடைபெற உள்ளது. இதற்கு முன் பல நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்நிலையில் தெலுங்கானாவில் மே மாதம் நடைபெற உள்ள உலக அழகி போட்டியை ரத்து செய்யக் கோரி அகில இந்திய ஜனநாயக மாணவர் அமைப்பு, அகில இந்திய ஜனநாயக இளைஞர் அமைப்பு, அகில இந்திய மகிளா சமஸ்கிருதி சங்கதன் போன்ற அமைப்புகள் போராட்டம் நடத்தின.

பெண்களை நுகர்வோர் பொருளாக சித்தரிக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படுகிறது. மேலும் மாநில அரசு தலையிட்டு போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அகில இந்திய மகிளா சமஸ்கிருதி சங்கதன் மாநில அமைப்பாளர் ஹேம லதா கூறியதாவது: பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டும் காஸ்மெட்டிக் நிறுவனங்களின் நலனுக்காக உலக அழகி போட்டி நடத்தப்படுகிறது.
தெலுங்கானா அரசு போட்டிக்கு ரூ.54 கோடி செலவழிக்க முடிவு செய்துள்ளதாகவும், அளவீடுகள் மூலம் பெண்களின் அழகை வரையறுப்பது தவறான கருத்து என்றும், பெண்களின் கண்ணியத்திற்கு கேடு விளைவிப்பதாகவும் அவர் கூறினார். தெலுங்கானா சுற்றுலாத்துறை செயலர் ஸ்மிதா சபர்வால் கூறுகையில், “தெலுங்கானாவின் கலாச்சாரம், அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றை உலகுக்கு வெளிப்படுத்தும் வகையில் உலக அழகி போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போட்டிக்கு திறந்த டிக்கெட்டுகள் விற்கப்படாது. அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்கள், சாதனையாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள்.”