டெல்லி: தமிழகத்தில் பொதுவாக அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் 500 ரூபாய் நோட்டுகளே அதிகம். இதனால், குறைந்த மதிப்புள்ள நோட்டுகள் கிடைக்காமல் பலர் சிரமப்படுகின்றனர். எனவே, மக்களின் இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வங்கி ஏடிஎம்களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்ய வங்கிகள் மற்றும் ஏடிஎம் நடத்துபவர்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மக்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் குறைந்த மதிப்புள்ள நோட்டுகளை அணுகுவதை உறுதிசெய்ய, ஏடிஎம்களில் தொடர்ந்து ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளை இருப்பு வைக்க வேண்டும். இதனை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் 75 சதவீத ஏடிஎம்களில் குறைந்தபட்சம் ஒரு பெட்டியில் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யுமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டது. மேலும் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் அனைத்து ஏடிஎம்களிலும் இந்த முறையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.