டெல்லி: பாதுகாப்பான பயணத்தின் அடிப்படையில் பலர் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். பயணிகள் 2 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து ஒரு குறிப்பிட்ட நாளில் அவர்கள் விரும்பிய இடத்திற்கு பயணிக்கின்றனர். இதற்கிடையில், முன்பதிவு செய்த பயணிகளின் இறுதி அட்டவணை ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
இதன் காரணமாக, காத்திருப்புப் பட்டியலில் இருந்து கடைசி நிமிடத்தில் இருக்கை கிடைக்காத பயணிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்த சிக்கலை தீர்க்க, ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன் முன்பதிவு அட்டவணையை தயாரிக்க ரயில்வே வாரியம் ரயில்வே அமைச்சகத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

இதை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன் முன்பதிவு அட்டவணையை தயாரிக்கும் பணியை படிப்படியாக தொடங்க உத்தரவிட்டுள்ளார்.
அதே நேரத்தில், பிற்பகல் 2 மணிக்கு முன் புறப்படும் ரயில்களுக்கான இறுதி முன்பதிவு அட்டவணை முந்தைய நாள் இரவு 9 மணிக்குள் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நாளையே அமலுக்கு வர வாய்ப்புள்ளது.