இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சமீப காலமாக தலிபான் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் அந்நாட்டு பாதுகாப்பு அமைப்புகள் கடும் பதட்டத்தில் உள்ளன. ஆப்கானிஸ்தானை குறிவைத்து நடத்திய எல்லைத் தாண்டும் வான்வழி தாக்குதலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே உறவு முறிவை நோக்கி செல்கிறது. இதனிடையே, பாக் ராணுவ தளபதி அகமது ஷெரிப் சவுத்ரி, “இந்தியா ஆப்கானிஸ்தானை பயங்கரவாத தளமாக பயன்படுத்துகிறது” என குற்றஞ்சாட்டியுள்ளார்.

தலிபான் அமைப்பின் முக்கிய பிரிவான தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் தலைவர் நூர் வாலி மெஹ்சுத்தை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்குப் பின் பதற்றம் அதிகரித்தது. இதன் பழியை இந்தியா மீது சுமத்தி தப்பிக்க முயற்சிக்கிறது பாக் அரசு என வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. அதே நேரம், நாட்டின் வடமேற்கு பகுதியான கைபர் பக்தூன்வாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஏழு ராணுவ வீரர்கள் உயிரிழந்தது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
ராணுவ தளபதி கூறியதாவது: “ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு நவீன ஆயுதங்களை வழங்குபவர்கள் பாகிஸ்தானின் எதிரிகள். இந்தியா இதற்கு பின்னணி என உறுதியான ஆதாரம் எங்களிடம் உள்ளது. பாகிஸ்தான் தனது எல்லைகளையும் மக்களையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்” என்றார். இதன் மூலம் பாக் ராணுவம், உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாட்டு காரணிகளை குற்றம் சொல்லி திசை திருப்ப முயற்சி செய்கிறது என்பதையும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்ததாவது, “தலிபான் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. மக்கள் மனநிலையில் அச்சம் நிலவுகிறது. பாகிஸ்தான் தனது உள்நாட்டு கொள்கைகளை மாற்றாமல் தொடர்ந்தால், பயங்கரவாதம் அதனை முழுமையாக விழுங்கும் அபாயம் உண்டு” என எச்சரித்துள்ளனர்.