கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள எலப்புள்ளி கிராமம், கலைநயமும் ஒற்றுமையும் கலந்த ஒரு புதிய முயற்சியால் கவனம் ஈர்த்துள்ளது. கொரோனா காலத்தில் கிராமத்தில் நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி, மக்களே நடிக்கும் திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. சுமார் 50 லட்சம் ரூபாய் செலவில், கிராமத்தின் இயற்கை அழகை வெளிப்படுத்தும் வகையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் சிறப்பு, கிராம மக்கள் அனைவரும் இதன் முக்கிய பங்காளிகளாக இருப்பது. அவர்கள் தங்களது வயல்வெளிகள், வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை படப்பிடிப்பு தளமாக வழங்கியுள்ளனர். இந்த முயற்சிக்கு முன்னணி வகிப்பது மலையாள திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் விவசாயியான தனேஷ் ரவீந்திரநாத் மற்றும் அவரது மனைவி அகிலேஷ்வரி. அவர்களின் இரண்டு ஏக்கர் சூரியகாந்தி வயல் மற்றும் செண்டு மல்லி நிலங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
திரைப்படத்தில் நடிக்கும் குழந்தைகள், மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் சிறப்பு பயிற்சிகளை பெற்றுள்ளனர். நான்காம் வகுப்பு மாணவன் சனோ கதாநாயகனாகவும், இயக்குனர் அகிலேஷ்வரியின் மகள் தக் ஷரா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும், நெய்தலை மற்றும் அப்புப்பிள்ளையூர் பகுதிகளில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரைப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கம் அனைத்தும் அகிலேஷ்வரி அவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், ஒரு கிராமத்தின் வாழ்க்கைச் சுவைகளை வெளிப்படுத்துவதோடு, ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது. இந்த முயற்சி, கேரள கிராமங்களின் கலைமிகு ஆற்றலை உலகிற்கு அறிமுகப்படுத்தும் ஒரு புதிய அத்தியாயமாகும்.