தமிழகத்தின் பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரை 46.7 கிலோமீட்டர் நீளத்தில் நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.1,853 கோடி மதிப்பீட்டில் உருவாக உள்ள இந்த திட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று அங்கீகரிக்கப்பட்டது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கே ரூ.350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், தற்போது பரமக்குடி-ராமநாதபுரம் சாலை இருவழிச்சாலையாக உள்ளதால், அதிக மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது பயண நேரத்தை அதிகரிக்கும் அல்லாமல், விபத்துகளுக்கும் காரணமாகின்றது. எனவே நான்கு வழிச்சாலை அமைப்பதன் மூலம் போக்குவரத்து எளிதாக நடைபெறும் மற்றும் பாதுகாப்பும் உயரும் எனத் தெரிவித்தார்.

இந்த நான்கு வழிசாலை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், வாகன வேகம் மணிக்கு 50 கிலோமீட்டரில் இருந்து 80 கிலோமீட்டராக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பயண நேரம் 60 நிமிடங்களிலிருந்து 35 நிமிடங்களுக்கு குறையும். இது அந்தப் பகுதியில் வாழும் மக்களின் அன்றாட போக்குவரத்தை மட்டுமல்லாது, அவை சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளையும் மேம்படுத்தும். மேலும், விபத்துகளும் குறைவாகும் என்பதால், மக்கள் பாதுகாப்பும் அதிகரிக்கிறது.
திட்டம் நிறைவு பெற்றவுடன் பரமக்குடி-ராமநாதபுரம் பகுதி தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும். மதுரை, ராமேஸ்வரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளை இணைக்கும் இந்த வழித்தடம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளுக்கு புதிய முன்னேற்றங்களை ஏற்படுத்தும். இத்திட்டம் தமிழகத்தின் வளர்ச்சிக்கே ஒரு நவீன அடித்தளமாக அமையும்.