பிரகாசம்: ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம், நரசிம்மபுரத்தில் நேற்று துணை முதல்வர் பவன் கல்யாண் குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் பேசிய அவர் கூறியதாவது:- முன்னாள் முதல்வர் ஜெகன் 2029-ல் ஆட்சிக்கு வந்ததும் எங்களை கவனித்துக் கொள்வேன் என்று கூறி எங்களை மிரட்டி வருகிறார்.
சக மனிதர்களை இவ்வாறு அச்சுறுத்தியதால் தான் இந்த நிலையில் இருப்பதாக ஜெகனுக்கு இன்னும் புரியவில்லை. முந்தைய ஜெகன் அரசு மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் நிதியைப் பயன்படுத்தவில்லை. மத்திய அரசுடன் நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.1,290 கோடி செலவில் இந்தத் திட்டத்தின் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயனடைவார்கள். ஜெகன் ஆட்சிக் காலத்தில், அவரது கட்சி உறுப்பினர்கள் லட்சுமி சென்னகேசவுலு கோயில் உட்பட பல்வேறு கோயில்களின் நிலங்களை ஆக்கிரமித்தனர்.
இந்த நிலங்களை மீட்க ஒரு தனி குழு அமைக்கப்படும். இதன் மூலம், அனைத்து கோயில் நிலங்களும் மீட்கப்படும். இவ்வாறு பவன் கல்யாண் கூறினார்.