அமராவதி: ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியதாவது:- தமிழ்நாட்டின் பிரச்சனைகளை நான் அறிவேன். அவற்றைத் தீர்க்க ஜன சேனா கட்சியின் சார்பாக நான் எப்போதும் உதவத் தயாராக இருக்கிறேன். மக்கள் பயனடைய வேண்டுமென்றால், நமக்கு ஒரு வலிமையான தலைவர் தேவை. அப்போதுதான் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று மக்கள் உணருவார்கள். ஆபரேஷன் சிந்தூர் மூலம் மக்கள் இதை உணர்ந்துள்ளனர்.
இதற்குக் காரணம் நமக்கும் நம் நாட்டிற்கும் கிடைத்த வலிமையான தலைவர். உலகமும் இதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. சமூகம் வலுவாக இருக்க, முதலில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது மிகவும் முக்கியம். முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மக்களின் பாதுகாப்புக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தனர். இருவரும் வேற்றுமையில் ஒற்றுமையைக் கண்டனர்.

திராவிட நிலம் என்பது பல சிறப்புகளைக் கொண்ட பூமி. எந்தவொரு மாநிலத்திற்கும் ஒரு வலிமையான தலைவர் தேவைப்பட்டால், தேர்தல்களின் போது வாக்குகள் சிதறடிக்கப்படக்கூடாது. நல்ல கூட்டணிகள் மூலம் மட்டுமே நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை அடைய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு பவன் கல்யாண் கூறியுள்ளார்.