பெங்களூரு: சொத்து வரி பாக்கியை நவம்பர் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.இல்லையெனில் இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு மாநகராட்சி எச்சரித்துள்ளது. மாநகராட்சியின் கருவூலத்தை நிரப்ப பல வழிகள் இருந்தாலும், சொத்து வரி முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட வரி இலக்கை எட்ட முடியாமல், மாநகராட்சி திணறி வருகிறது. இதற்கு சொத்து உரிமையாளர்களின் அலட்சியமே காரணம். 2.4 லட்சம் சொத்துக்களுக்கு இன்னும் 406 கோடி ரூபாய் வரி பாக்கி உள்ளது. நிதியாண்டின் தொடக்கத்தில், சொத்து வரி செலுத்துவோருக்கு வரித் தொகையில் ஐந்து சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்தச் சலுகையை மக்கள் சரியாகப் பயன்படுத்துவதில்லை. பல ஆண்டுகளாக வரி பாக்கிகளுக்கான வட்டி மற்றும் அபராதங்களை தள்ளுபடி செய்யும் வகையில் ODS என்ற ஒருமுறை தீர்வு திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தியுள்ளது.
நவம்பர் 30ம் தேதிக்குள் வரி செலுத்தினால், வட்டி மற்றும் அபராதம் தள்ளுபடி செய்யப்படும். வரி செலுத்துவோர் இந்த பலனையும் பெறுவதில்லை. நவம்பர் 30ம் தேதிக்குள் வரி செலுத்தாவிட்டால் இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு மாநகராட்சி எச்சரித்துள்ளது.
மாநில அரசின் ODS திட்டம் முடிய இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது என மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே சொத்து உரிமையாளர்கள் வரி பாக்கியை நவம்பர் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
செலுத்தவில்லை என்றால் டிசம்பர் 1ம் தேதி முதல் இரட்டை வரி விதிக்கப்படும்.ஓடிஎஸ் திட்டத்தை அனைவரும் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுகுறித்து, மாநகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. 406 கோடி வரி பாக்கி உள்ளது. சொத்து உரிமையாளர்கள் முறையாக வரி செலுத்த வேண்டும் என்றனர்.