புதுடில்லியில், ஒரே நாளில் 5 பிரபலமான பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் வாயிலாக வந்த மிரட்டல் தகவல் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் துவாரகாவில் உள்ள பள்ளிகளில் ஒன்றுக்கு வந்த மின்னஞ்சலில், வெடிகுண்டு வெடிக்கும் நேரம் குறித்து குறிப்பிட்டு இருந்தது. இதனால் பள்ளி நிர்வாகம் அவசரமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வெளியேற்றியது.

இந்த தகவலை தொடர்ந்து, போலீசார் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் எந்தவொரு வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதேபோல், வசந்த குஞ்ச், ஹாஸ்காஸ், பஷ்சிம் விஹார் மற்றும் லோதி எஸ்டேட் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் அதேபோன்ற மிரட்டல்கள் வந்திருந்தன.
அனைத்து பள்ளிகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டதில், இந்த மிரட்டல்கள் வெறும் புரளிகள் என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர். இருப்பினும் இதுபோல் ஒரே நாளில் 5 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்திருப்பது, ஒரு திட்டமிட்ட செயல் என சந்தேகிக்கப்படுகிறது. இதை மேற்கொண்ட நபர் யார் என்ற தகவலை கண்டுபிடிக்க, சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன்னும் இதுபோல் பல முறை டில்லி பள்ளிகள் வெடிகுண்டு மிரட்டலால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டில் மட்டும், ஒரே நாளில் 44 பள்ளிகள் இதேபோன்ற மின்னஞ்சல் மிரட்டல்களை பெற்றிருந்தன. இம்மாதிரியான செயல்கள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கின்றனர்.