ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர்வளக் குறைபாடு மற்றும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் மத்திய அரசு சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. கே. நவாஸ்கனி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், விதி 377-ன் கீழ் உரையாற்றிய நவாஸ்கனி, ராமநாதபுரம் ஒரு வறண்ட பகுதி என்பதால், நிரந்தர நீர்நிலைகள் இல்லாத இந்த பகுதியில் குடிநீர் தேவை கடுமையாக இருப்பதை கவனத்தில் கொண்டு, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்காக, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் தொகுதி முழுவதும் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரி, வைகை ஆற்று நீரை கண்மாய்களுக்குள் சென்றடையும்படி செய்ய வேண்டும். இதன்மூலம், விவசாயம் செழிக்கவும், குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யவும் வழி செய்யலாம் என அவர் கூறினார்.
மேலும், காட்டாற்று வெள்ளம் ஏற்படும் வரத்து கால்வாய்களில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் வளங்களை மேம்படுத்த ரீசார்ஜ் போர்வெல் அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடியும். இதனால், ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை குறையும்.
ராமநாதபுரம் முழுவதும் உள்ள கிராமங்கள், நகரங்கள் மற்றும் தெருக்களில் ரீசார்ஜ் போர்வெல் அமைப்பதற்காக மத்திய அரசு விரைவில் சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தக் கோரிக்கை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மக்களின் நீண்ட நாள் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.