புதுடில்லி: நாட்டின் இரண்டாவது உயரிய பதவியாகக் கருதப்படும் துணை ஜனாதிபதி பதவி, சம்பளம் இல்லாத அரசியல் சட்ட அந்தஸ்து பெற்ற ஒரே பதவியாகும். ஆனால், ராஜ்யசபா தலைவராக செயல்படுவதற்காக மாதம் ரூ.4 லட்சம் வரையிலான சம்பளம் வழங்கப்படுகிறது. தற்போதைய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உடல்நலக்குறைவு காரணமாக ராஜினாமா செய்த நிலையில், செப்டம்பர் 9ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் கூட்டணியின் வேட்பாளராக மகாராஷ்டிரா கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். இருவருக்குமான போட்டி தேசிய அரசியலில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
சம்பளத்துக்கு அப்பால், துணை ஜனாதிபதிக்கு அரசாங்கம் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. அதில் இலவச பங்களா, மருத்துவ சலுகைகள், விமானப் பயண சலுகை, பாதுகாப்பு வசதி, நிரந்தர பணியாளர்கள் என பல வசதிகள் அடங்கும். ஓய்வு பெற்ற முன்னாள் துணை ஜனாதிபதிக்கு மாதம் ரூ.2 லட்சம் பென்சன், டைப் 8 தர பங்களா உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.
மேலும், முன்னாள் துணை ஜனாதிபதி உயிரிழந்தால், அவரது மனைவிக்கு ஆயுட்காலம் முழுவதும் டைப் 7 பங்களா ஒதுக்கப்படும். இத்தகைய சலுகைகள் காரணமாக, துணை ஜனாதிபதி பதவி அரசியல் வாழ்க்கையில் பெரும் மரியாதையும், அதிகாரமும் கொண்டதாகத் திகழ்கிறது.