வியன்னா: பருவநிலை மாற்றம், பயங்கரவாதம் உள்ளிட்ட மனித இனம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்கள் குறித்து ஆஸ்திரியா அதிபருடன் ஆலோசனை நடத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு ஆஸ்திரியா வந்தடைந்த பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டின் இசைக் கலைஞர்கள் தேசிய கீதம் இசைத்து மோடியை வரவேற்றனர்.
நாட்டின் அதிபர் மாளிகைக்கு வந்த மோடியை அதிபர் கார்ல் நெஹ்மர் வரவேற்றார். இதையடுத்து, இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தகம் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் குறித்து விரிவாக விவாதித்தோம் என்றார் கார்ல் நெஹ்மர். இந்தியாவின் நிலைப்பாட்டை அறிந்து, ஐரோப்பிய கவலைகள் மற்றும் பிரச்சனைகளை இந்தியாவுக்கு தெரிவிப்பது எனது கடமை. மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.
இந்தியா செல்வாக்கு மிக்க நாடு. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே அமைதியை ஏற்படுத்த இந்தியாவின் பங்கு மிகவும் முக்கியமானது என்றார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: எனது 3வது பதவி காலத்தில் ஆஸ்திரியாவுக்கு வர வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போருக்கான நேரம் அல்ல என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.
பருவநிலை மாற்றம், பயங்கரவாதம் உள்ளிட்ட மனித இனம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவாதித்தோம். பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச சோலார் ஒத்துழைப்புக் கூட்டணியுடன் இணைந்து செயல்பட ஆஸ்திரியாவை நான் அழைக்கிறேன். தீவிரவாதத்தை எந்த வடிவத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். இதையடுத்து, அந்நாட்டு அதிபரை சந்திக்க செல்லும் பிரதமர் மோடி, இந்திய வம்சாவளி மக்களிடமும் பேச உள்ளார்.