புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக பட்ஜெட் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் அரசு கருத்து கேட்டு வருகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி நேற்று பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை சந்தித்து பேசினார்.
2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய பட்ஜெட்டில் செயல்படுத்த வேண்டிய அம்சங்கள் குறித்து நிபுணர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
இதில், மோர்கன் ஸ்டான்லியின் ரிதம் தேசாய், விவசாயப் பொருளாதார நிபுணர் அசோக் குலாடி, சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சுர்ஜித் பல்லா உள்ளிட்ட 15 வல்லுநர்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடியுடன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெர்ரி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.