சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இந்தியாவுக்கு விஜயம் செய்து, டெல்லியில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். அந்த சந்திப்பில், சீனா பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சிக்கு இந்தியா கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. பின்னர் அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் 24ஆவது இருதரப்பு கூட்டத்தில் பங்கேற்றார்.

இதனைத் தொடர்ந்து, வாங் யீ பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதிகளில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு வழங்கினார்.
பிரதமர் மோடி அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டதோடு, எல்லைப் பகுதியில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிற அவர், அந்நாட்டின் அதிபருடன் முக்கியமான இருதரப்பு விவகாரங்களைப் பற்றி விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள சூழலில், மோடியின் இந்த சீனப் பயணம் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.