ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள புகழ்பெற்ற தர்காவில் ஆண்டுதோறும் ஜனவரி 4-ம் தேதி உர்ஸ் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பயன்படுத்துவதற்காக உரூஸ் எனப்படும் மலர் போர்வையை பிரதமர் மோடி வழங்கினார்.
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று தர்கா நிர்வாகத்திடம் மலர் போர்வையை முறைப்படி வழங்கினார். அஜ்மீர் தர்கா தொடர்பாக இந்து சேனா தேசிய தலைவர் விஷ்ணு குப்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை கடந்த நவம்பர் மாதம் விசாரிக்க அஜ்மீர் நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
பிரதமர் மோடி மலர் போர்வை வழங்கியதாக வெளியான செய்திகளை அடுத்து, நீதிமன்ற வழக்கு தீரும் வரை பிரதமர் மோடி மலர் போர்வையை அளிக்கக்கூடாது என இந்து சேனா தேசிய தலைவர் விஷ்ணு குப்தா கூறியிருந்தார். அதையும் மீறி மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று அஜ்மீர் தர்காவில் பிரதமர் மோடி சார்பில் பாரம்பரிய முறைப்படி மலர் போர்வையை வழங்கினார்.