சென்னை: வாடகை வீட்டுக்காரர்களுக்கு சொந்த வீடு கட்டுவதற்கான ஒரு பெரிய வாய்ப்பாக மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) மூலம் நிதியுதவி வழங்கியுள்ளது. பணமில்லாதவர்கள் கூட இத்திட்டத்தின் மூலம் வீடு கட்டிக் கொள்ள முடியும். நகர்ப்புற பகுதிகளில் ஏழை மக்களுக்கு வீடுகளை கட்டிவர மாநில அரசுகளுடன் சேர்ந்து மத்திய அரசு செயல்படுத்தும் இந்த திட்டம், அனைவருக்கும் வீடு என்ற இலக்கை நோக்கி நகர்ப்புற வீட்டு வசதி திட்டமாகும். இதற்கிடையில், புதிய குட்நியூஸ் வெளியாகி பயனாளர்களுக்கு முக்கிய தகவலை வழங்கியுள்ளது.

PMAY நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ், மத்திய அரசு 1 கோடி 20 லட்சம் பேருக்கு வீடு கட்ட நிதியுதவி அளிக்க திட்டமிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இதனை விரிவுபடுத்தும் நோக்கில் நகர்ப்புற வீட்டு வசதி 2.0 திட்டத்தை துவங்கியுள்ளது. இதன் பகுதியாக, அங்கிகார் 2025 பிரச்சாரம் மூலம் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, செயல்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது. இதனால், பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிய 1,40,942 வீடுகளை கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செயலாளர் ஸ்ரீனிவாஸ் கதிகிதலா தெரிவித்ததாவது, புதிய ஒப்புதலின் மூலம் இந்த திட்டத்தின் மூலம் ஒப்புதல் பெற்ற வீடுகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துவிட்டது. அசாம், ஆந்திர பிரதேசம், சட்டீஸ்கர், குஜராத், ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி, ராஜஸ்தான், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், மேகாலயா, ஹரியானா, ஒடிசா, உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த வீடுகள் கட்டப்பட உள்ளன. ஒவ்வொரு வீடுக்கும் போதிய உள்கட்டமைப்பு, சாலைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளை கட்ட 1 கோடி குடும்பத்தினருக்கு ரூ.2.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இதன் மூலம் வீடு இல்லாதோர் விரைவில் சொந்த வீட்டை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கும். பிரதான மந்திரியின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் 2.0 நகர்ப்புற மக்களுக்கு மிகச் சிறந்த உதவியாக அமைகிறது, இதன் மூலம் வீட்டு வசதி மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முக்கிய முயற்சி தொடர்கிறது.