ஹைதராபாத்: பொதுவாக வாடகை வாகன சேவைகள் குறித்து பல்வேறு குறை கூறப்பட்டாலும், சமீபத்தில் ஒரு பைக் டாக்சி டிரைவர் எடுத்த செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுக்குரியதாக மாறியுள்ளது. ராபிடோ நிறுவனத்தில் பணியாற்றும் அந்த டிரைவர், தனது பெண் பயணியை வீட்டு வாசலில் இறக்கி வைத்து, அங்கு சாவியைத் தேடி தவித்த அவருக்கு உதவியாக இருந்து பாதுகாப்பை உறுதி செய்தார்.

வீட்டு சாவியை தவறவிட்ட பெண், தோழியை தொடர்பு கொண்டு மாற்று சாவியை எடுத்து வரும்படி கூறினார். இதற்கிடையில் அவர் தனியாக வெளியே காத்திருப்பது ஆபத்தானது என்று கருதிய டிரைவர், அவரது தோழி வரும்வரை வாசலிலேயே காத்திருந்தார். பின்னர், பாதுகாப்பாக வீட்டிற்குள் சென்றதை உறுதி செய்த பிறகு தான் அங்கிருந்து கிளம்பினார்.
இந்த நிகழ்வை பெண் தனது மொபைல் மூலம் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். “இன்னும் மனிதாபிமானம் உள்ளது” எனக் குறிப்பிட்டு பதிவிட்ட அந்த வீடியோ பரவலாகப் பகிரப்பட்டது. பலரும் டிரைவரின் செயலுக்கு மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சமூகத்தில் நல்லெண்ணம் கொண்டவர்கள் இன்னும் இருப்பதை இந்த சம்பவம் உறுதிப்படுத்துகிறது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நடந்த இடம் தொடர்பான தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், கர்பா இரவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது இதுவே நடந்ததாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்படும் இந்தச் சம்பவம், பைக் டாக்சி சேவையின் நம்பகத்தன்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.