மத்திய பாஜக ஆட்சியை எதிர்க்கும் மாநில அரசுகளைக் குறிவைத்து ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்படுவதாக சில அரசியல் கட்சிகள் மத்தியில் கருத்து நிலவுகிறது. இதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை குறித்து பாட்னாவில் நேற்று அளித்த பேட்டியில் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:- நான் பல தேர்தல்களில் ஈடுபட்டுள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் எங்காவது தேர்தல் நடத்தப்படுகிறது. 1960-ம் ஆண்டு வரை மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த முறை மீண்டும் வந்தால் நாட்டுக்கு நல்லது.

ஆனால் இந்த மாற்றம் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். திடீரென்று இந்த மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது. புதிய மசோதாக்களின் வெற்றி என்பது மத்திய அரசின் நோக்கத்தைப் பொறுத்தே உள்ளது. பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற பெயரில் சட்டம் கொண்டு வரலாம். ஆனால் அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை துன்புறுத்த பயன்படுகிறது. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.