புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019-ன் பிரிவு 73-ன் அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து காஷ்மீரில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அரசியலமைப்பின் 370-வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, ஆகஸ்ட் 5, 2019 அன்று பிஜேபி அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது மற்றும் லடாக் இப்பகுதியில் இருந்து பிரிக்கப்பட்டது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 2019 அக்டோபர் 31 முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. இந்நிலையில், காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடந்தது.
மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 55 இடங்களைக் கைப்பற்றியது. இதில் காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனிடையே, தேசிய மாநாட்டுக் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க 5 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமல் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சி அமைக்க முடியும். எனினும், தேசிய மாநாட்டுக் கட்சிக்கு காங்கிரஸ் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் என்று ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் காரா தெரிவித்துள்ளார்.
லெப்டினன்ட் கவர்னர் 5 நியமன உறுப்பினர்களை நியமிப்பார். இந்த சூழலில் காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா வரும் 16-ம் தேதி பதவியேற்கிறார். 2009 முதல் 2015 வரை காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா இருந்தார் என்பது ஏற்கனவே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
உமர் அப்துல்லா பதவியேற்க அதிகாரபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இனி காஷ்மீரில் ஜனநாயகம் நிலைநாட்டப்படும்.