ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாளை அமலுக்கு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 21) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார் என ஏஎன்ஐ தகவல் வெளியிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு அறிமுகமான ஜிஎஸ்டி வரி, தற்போது 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக பிரிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சமீபத்தில் நடைபெற்ற 56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், இந்த அமைப்பு எளிமைப்படுத்தப்பட்டு இனி இரண்டு அடுக்குகளாக மட்டுமே இருக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த புதிய நடைமுறைகள் வரும் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும்.

இதனால் பல்வேறு பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தீபாவளி பண்டிகை காலத்தில் மக்களுக்கு விலை குறைப்பு ஒரு பரிசாக இருக்கும் என பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இன்று மாலை நடைபெறும் அவரது உரையில், இந்த சீர்திருத்தங்கள் வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எவ்வாறு பயன்படும் என்பதையும், பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களையும் விரிவாக விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகள் மற்றும் H1B விசா தொடர்பான விதிமுறைகள் இந்திய தொழில்துறைக்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் பிரதமர் மோடி உரையாற்ற வாய்ப்புள்ளது. எனவே, இன்று மாலை நடைபெறும் உரை, மக்கள் மற்றும் தொழில் துறையினரின் கவனத்தை ஈர்க்கும் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.