புதுடில்லியில் துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. ஜக்தீப் தங்கர் உடல்நலக் காரணத்தால் தனது பதவியிலிருந்து கடந்த மாதம் 21ஆம் தேதி ராஜினாமா செய்தார். அதனை உடனடியாக ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், புதிய துணை ஜனாதிபதிக்கான தேர்தலை செப்டம்பர் 9ஆம் தேதி நடத்த அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கி, வரும் 21ஆம் தேதி வரை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மனுதாக்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது.

இந்த சூழலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார். ஆகஸ்ட் 19ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு குறித்து விவாதிக்கப்படும். பாஜக தலைவர்கள் ஏற்கனவே முன்னாள் கூட்டத்தில், வேட்பாளர் தேர்வு அதிகாரத்தை பிரதமர் மோடிக்கும், கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கும் வழங்க முடிவு செய்திருந்தனர்.
பார்லிமென்ட் குழுக் கூட்டமும் நாளை நடைபெற உள்ளது. அதில் அனைத்து எம்பிக்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாஜக கூட்டணிக்கு எதிராக இண்டி கூட்டணியும் தங்களது வேட்பாளரை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதால், போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் வட்டாரங்களில் பல முக்கிய தலைவர்கள் துணை ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அடுத்த சில நாட்களில் அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டும் நிலை தெளிவாகிறது.