புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா ஜனவரி 13-ம் தேதி முதல் கோலாகலமாக நடந்து வருகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து புனித நீராடுகின்றனர்.
மகா கும்பமேளாவில் இதுவரை 38 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர் என்று உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும் இந்த புனித நீராடல் நிகழ்ச்சியில் சுமார் 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
ருத்ராட்ச மாலையை அணிந்து கொண்டு பிரதமர் மோடி மந்திரங்களை உச்சரித்தார். பின்னர், தண்ணீரில் மூழ்கி எழுந்தார். சூரியனையும் கங்கை நதியையும் வேண்டிக் கொண்டார். அவருடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனிருந்தார். முன்னதாக, விமானம் மூலம் பிரயாக்ராஜ் வந்தடைந்த பிரதமரை ஆதித்யநாத் வரவேற்றார். பின்னர், படகு மூலம் திரிவேணி சங்கமத்தை பார்வையிட்டனர்.
இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் காரணமாக புனித யாத்திரை தலங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, டிசம்பர் 13, 2024 அன்று பிரயாக்ராஜுக்குச் சென்ற பிரதமர் மோடி, 167 வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.